இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க ஆட்சியில் 2011 – 2015-ம் ஆண்டில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோதமாக வேலை வாங்கித் தருவதாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூன் 14 -ம் தேதி கைது செய்தது.
இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார். இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.