Byju’s நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பைஜு ரவீந்திரனுக்கு (Byju Raveendran) எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு மத்திய குடிவரவு பணியகத்தை அமலாக்கத்துறைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நடவடிக்கை ரவீந்திரன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பைஜு ரவீந்திரன் இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏற்கனவே அவர் பெயரில் இருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் உடன், புதிய லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை மத்திய குடிவரவு அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் கொச்சி அலுவலகத்தின் கோரிக்கையின் பேரில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரவீந்திரனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறை பெங்களூரு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.
ரவீந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக டெல்லிக்கும் துபாய்க்கும் இடையே அடிக்கடி பயணம் செய்து வருகிறார். இந்த வார தொடக்கத்தில் அவர் பெங்களூருவில் இருப்பதாக அறிக்கைகள் கூறினாலும், ரவீந்திரன் தற்போது துபாயில் இருப்பதாகவும், நாளை சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரவீந்திரன் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவது அவர் நாடு திரும்பியதும், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் என்று மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை Byju’s நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும், வழக்கின் சுமூகமான முடிவை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.