தமிழ்நாட்டில் ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மின் தூக்கி வசதி, தானியங்கி படிக்கட்டுகள், ரயில்வே கோச் வடிவில் உணவகம், வாகனம் நிறுத்தும் வசதி, பயணச் சீட்டு அலுவலகம் ஆகியவை இங்கு அமைக்கப்பட உள்ளன.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் பங்கேற்றார்.
பின்னர் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, இந்திய ரயில்வே துறையில், 26-ஆம் தேதி மிக முக்கியமான நாள் என்றும், நாடு முழுவதும் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே வளர்ச்சி பணிகளை பிரதமர் தொடங்கி வைத்துள்ளதாகவும் கூறினார்.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் திட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மேட்டுப்பாளையம் பகுதியில் ரயில் பாதைகளை சீரமைக்க சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை, இராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டில் ரயில்வே துறை மிக வேகமாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்து வருகிறது. தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஏழு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது என்று கூறினார்.