சலுகைக் கட்டண வசதி உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான (PwDs) ஒதுக்கீட்டை ரயில்வே அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. இனி மாற்றுத்திறனாளிகள், கட்டணச் சலுகைகளைப் பற்றி கவலைப் படாமல், அனைத்து ரயில்களிலும் இருக்கை ஒதுக்கீடுகளைப் பெறலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…
கடந்த 2014 ஆண்டிலிருந்தே இந்திய இரயில்வே துறை மாற்றுத் திறனாளிகளுக்காக மேம்படுத்தப்பட்ட இரயில் பயணத்தை உறுதி படுத்தி வருகிறது.
முதன் முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு இரயில் கட்டணச் சலுகைகளைப் பெற உதவும் வகையில் அடையாள அட்டைகளை, இந்திய இரயில்வே துறை அறிமுகப்படுத்தியது.
இந்த அடையாள அட்டையைப் பெறும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குறியீடு வழங்கப் பட்டது. இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, மாற்றுத் திறனாளிகள், ரயில்வே முன்பதிவு நிலையத்துக்கு நேரில் செல்லாமல், ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் பயணச் சீட்டை பதிவு செய்து கொள்ளலாம்.
இப்படி படிப் படியாக மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு வழிகளில் பயன்தரும் திட்டங்களை தந்த இரயில்வே துறை இப்போது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நான்கு இருக்கைகள் வசதி உட்பட கட்டணச் சலுகைகளையும் தந்துள்ளது.
மேலும், ‘ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, ஹம்சஃபர், கடிமான் மற்றும் வந்தே பாரத் விரைவு ரயில்கள் உட்பட அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட விரைவு மற்றும் சாதாரண மெயில் ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சீட்கள் ஒதுக்கீடு செய்யப் படும்’ என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை ரயில்வே துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு Centre For Railway Information Systems (CRIS) செய்து வருகிறது.
கட்டணச் சலுகை இல்லாத ரயில்களிலும், மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டையின் குறியீட்டை ஏற்றுக் கொண்டு பயணச் சீட்டை வழங்கும் வகையில் முன்பதிவு செய்யும் மென்பொருளில் திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளில் 4 சிறப்பு இருக்கைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவை இரண்டு கீழ்த்தளத்திலும், இரண்டு மத்திய தளத்திலும் அதாவது Middle Berth லும் வழங்கப்படும்.
இத்தகைய வசதிகள், ஸ்லீப்பர் கிளாஸ், த்ரீ டயர் ஏசி, 3E, 3A உள்ளிட்ட பெட்டிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், கரிப் ரத ரயில்களில் SLRD எனப்படும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் சிறப்பு இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் C1 மற்றும் C7 ஆகிய பெட்டிகளிலும்
16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலாக இருந்தால் C1 மற்றும் C14 பெட்டிகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு இருக்கை வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன.
வந்தே பாரத் ரயில்களில் ,மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமின்றி, அவர்களுடன் துணைக்கு வரும் ஒரு உதவியாளருக்கு கூடுதலாக ஓர் இருக்கை டிக்கெட் முன்பதிவின் போது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வே வழங்குகின்ற இந்த சேவையை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த , இந்தியன் ரயில்வே மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அடையாள அட்டை அவசியம்.
ஆன்லைனில் இல்லாமல் முன்பதிவு மையங்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் , தங்களுக்கான கட்டணச் சலுகை சான்றிதழையும் மற்றும் ரயில்வே துறையால் வழங்கப்பட்ட சிறப்பு அடையாள அட்டையையும் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு துணையாக வருபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு இருக்கைகளில் ஒன்று அல்லது இரண்டுமே காலியாக இருந்தால், அவற்றை வேறு மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு ஒதுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இரயில்வே துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வே துறை செய்த இந்த சிறப்பு நடவடிக்கைகளுக்கு, மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.