வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆளும் கட்சி எம்.பி.யுமான மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
நரைல்-2 தொகுதி அவாமி லீக் கட்சியின் எம்.பி.யும், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்ததால், பதற்றம் நிலவியது. இதுதவிர, சில இந்து கோயில்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஷேக் ஹசீனா தஞ்சமடைந்ததாக கூறப்படும் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் ஹிண்டன் விமானப் படை தளத்திலிருந்து காலை 9 மணியளவில், வங்கதேச ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில், ஷேக் ஹசீனாவும் இருந்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் அதை மறுத்த ராணுவ வட்டாரங்கள், வங்கதேச ராணுவ வீரர்கள் 7 பேர் அதில் சென்றதாக தெரிவித்தனர்.