புதுச்சேரி காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்தும் செய்யும் காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
அதனை கட்டுப்படுத்த காவல்துறை, பொதுப்பணித்துறை சேர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்றும், புதுச்சேரியில் 34 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
நகரை கண்காணிக்க ஸ்மார்ட் சிட்டி மூலம் 17 இடங்களில் சிக்னல்களுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அவற்றை ஒரு வாரகாலத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போக்குவரத்து மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசி உள்ளதாக தெரிவித்தார். விரைவில் தான் டெல்லி சென்று சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
போக்குவரத்து போலீசார் டார்கெட் வைத்து அபராதம் வசூலிப்பது இல்லை. தலையில் காயம் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். அதற்காகத்தான் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஹெல்மெட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களிடம் கடுமைான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது போன்ற புகார்களுக்கு உள்ளாகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் தெரிவிக்க விரைவில் கட்டணமில்லா எண் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.