ஹமாஸ் அமைப்பினரால் சிறைப் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இஸ்ரேலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, ஜெருசலம், டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்களில் 500,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினரால் 200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேரின் சடலங்களைத் தெற்கு காசா பகுதியின் சுரங்கம் ஒன்றில் இருந்து மீட்டதாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் தேசியக் கொடியை ஏந்தியவாறு தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இஸ்ரேலிய மக்கள் , மீதமுள்ள பிணைக்கைதிகளை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடைபெற்ற போதிலும், டெல் அவிவ்வில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தான் காரணம் என்று இஸ்ரேல் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பிணைக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல் மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிணைக் கைதிகளை மீட்க போதுமான அளவு சாதுர்யமாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செயல்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
பிணைக் கைதிகளை விடுவிப்பதில் தன்னை விட யாரும் உறுதியாக இல்லை என்றும் இதைப் பற்றி யாரும் தனக்கு அறிவுறுத்த வேண்டாம் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , 6 பிணைக் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிலடெல்பி காரிடார் என்று அழைக்கப்படும் இஸ்ரேல் எகிப்து எல்லையில் காசா பக்கத்தின் மீதான கட்டுப்பாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக இருந்தார். அதை விட்டுக் கொடுத்தால், அது இஸ்ரேல் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாகி விடும் என்று தொடக்கத்திலிருந்தே கூறிவந்தார்.
இதனால் போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் ஏற்படாமல் இருக்கிறது. இஸ்ரேல் இராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட்டும் இந்த முடிவு தவறானது என்று எடுத்துச் சொல்லியும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கேட்க வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பிரதமருக்குப் பிணைக் கைதிகள் ஒப்பந்தம் அல்லது போர்நிறுத்தத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது என்று முன்னாள் இஸ்ரேல் தூதரும் அரசு ஆலோசகருமான அலோன் பிங்காஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சூழலில் இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கான ஆதரவு வெகுவாக குறைந்து வருகிறது. பெரும்பான்மையான இஸ்ரேல் மக்கள் இதுவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடைசி பதவிக்காலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், அவர் அடுத்த தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என்றும் கூறுகின்றனர்.
அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் 69 சதவீத இஸ்ரேல் மக்கள் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரியவருகிறது.
6 பிணைக்கைதிகளப் பத்திரமாக காப்பாற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கும் பிரதமர், நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
வரும் நாட்களில் இஸ்ரேல் மக்களின் போராட்டங்கள் வேறு வடிவம் எடுக்கலாம் என்று தெரிகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.