பிரதமர் மோடியின் புருனே பயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் புவி சார் அரசியல் பார்வை புதிய வடிவம் பெற வழிவகை செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சுமார் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறிய நாடு தான் புருனே. ஆனால் பெரிய பணக்கார நாடாக புருனே உள்ளது.
பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களுக்கு பெயர் பெற்ற புருனே, உலகின் நீண்ட கால மன்னரான சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவால் ஆளப்படுகிறது.
போர்னியோ தீவில் அமைந்துள்ள புருனேவுக்கு வடக்கே தென் சீனக் கடல் மற்றும் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் மலேசியா எல்லையாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய-பசிபிக் மையத்தில் அமைந்துள்ள புருனே மிக முக்கியமான புவிசார் அரசியல் மற்றும் புவிசார் மையமாக இருக்கிறது.
சர்வதேச புவிசார் அரசியல், தன்னை ஒரு குழப்பமான பகுதியில் வைத்துள்ளது என்பதை புருனே புரிந்துகொள்கிறது என்றாலும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் புருனேவில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சி செய்து வருகின்றன. இதையறிந்து, சீனாவுடனும் அமெரிக்காவுடனும் புருனே நல்லுறவையே இதுவரை பேணி வருகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி கடந்த வாரம் இரு நாட்கள் அரசு முறை பயணமாக புருனே நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க புருனே பயணம், இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக பார்க்கப் படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஆழமான தொடர்புகளை வளர்ப்பதற்கும், பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்துக்கு மாற்றாக இந்தியாயை முன்நிறுத்துவதற்கும் பிரதமர் மோடியின் புருனே பயணம் வழியமைத்திருக்கிறது.
இந்தியாவின் கண்ணோட்டத்தில், விண்வெளித் துறை சார்ந்த விஷயங்களில் புருனே ஒரு அதிமுக்கியமான கூட்டாளியாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
2018ம் ஆண்டில், புருனேவுடன் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை வாகனங்களுக்கான டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்களின் செயல்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் படி, இஸ்ரோ டிடிசி நிலையம் என்று அழைக்கப்படும் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நிலையத்தை புருனேவில் அமைத்துள்ளது. இது செயற்கைக்கோள்கள் மற்றும் கிழக்கு நோக்கி விண்ணில் ஏவப்படும் அனைத்தையும் கண்காணித்து வருகிறது. இப்போது இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புருனேவைத் தவிர மொரிஷியஸ் , ரஷ்யா , இந்தோனேசியா மற்றும் அண்டார்டிகா ஆகிய நாடுகளிலும் இஸ்ரோ கண்காணிப்பு நிலையங்களை அமைத்திருக்கிறது.
பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் விண்வெளி நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடமாக புருனே அமைந்துள்ளது. இதனால்,புருனே புவிசார் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
புருனேவின் விண்வெளி தொழில்நுட்பங்களில் இந்தியா முதலீடு செய்து வருகிறது, மேலும் இந்தியா தனது ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கையை விரிவுபடுத்துவதற்கும் விண்வெளியை அதிகளவில் இந்தியா பயன்படுத்தும் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.