விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் மேலும் 2 கல்மணிகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் ஆபரணங்கள், செப்புக்காசுகள், சுடுமண் காதணிகள் உள்ளிட்ட ஆயிரத்து 560 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதே பகுதியில் 9-வது குழியை தோண்டியபோது பச்சை நிறத்திலான 2 கல்மணிகள் கிடைத்தன. இதனை ஆராய்ச்சி செய்த அதிகாரிகள் பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்களாகவும், ஆண்கள் மோதிரத்தில் பதிக்கக்கூடிய கற்களாகவும் இதனை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிவித்தனர்.
முன்னதாக சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களிலும் கல்மணிகள் கிடைத்ததால் இப்பகுதிகளில் கல்மணிகள் தயாரிப்பு கூடம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.