உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குழந்தைகள் முறையான கல்வியைப் பெறுவதற்குப் பொருத்தமற்ற இடங்களாகவே மதரஸாக்கள் உள்ளன என்றும், NCPCR உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மதரஸா என்ற அரபுச் சொல்லுக்கு கல்வி நிறுவனம் என்று பொருள். எந்த ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் இல்லாததால், மதரஸாவில் பழைய பாரம்பரிய முறையில் பாடம் கற்பிக்கப் படுகிறது. இந்தியர்களில் சராசரியாக முஸ்லிம் பெற்றோர்களில் பாதிபேர் மதரஸாக்களில் தான் தங்கள் குழந்தையை சேர்க்கின்றனர்.
முதன்முதலாக, 1866ம் ஆண்டில், தியோபந்தில் தாருல் உலூம் சார்பாக ஒரேயொரு மதரஸா தோன்றியது.அதன்பின், 1876ம் ஆண்டில் ஐதராபாத் நிஸாம்களின் சார்பாக நிஸாமியா மதரஸாவும், தொடர்ந்து,1898ம் ஆண்டில் முபாரக்பூரில் அல்’ஜாமியத்துல் அஷ்ராபியா மதரஸாவும் தொடங்கப் பட்டன.
இந்த மூன்று மதரஸாக்களை, பல்கலைக்கழகத்திற்கு இணையானதாக எடுத்துக்கொண்டு இவற்றுக்கு கீழ் இந்தியா முழுவதும் பல மதரஸாக்கள் தொடங்கப்பட்டன.
இந்தியா விடுதலை அடைந்தபோது நாடு முழுவதும் வெறும் 88 மதரஸாக்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2003ம் ஆண்டில், அவை 5 லட்சம் மதரஸாக்களாக அதிகரித்துள்ளன.
இந்தியாவில் மொத்தமுள்ள 19,132 அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்களில், சுமார் 16,513 மதரஸாக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில், சுமார் 8,449க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களும் இயங்கி வருகின்றன. அதற்கடுத்த நிலையில் பீகார்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் மதரஸாக்கள் உள்ளன. டெல்லி,குஜராத்,கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிக மதரஸாக்கள் இயங்கி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டம் கடந்த 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அங்குள்ள 16,000 மதரஸாக்களில் 17 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதன்முறையாக உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டதும், மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தேசியக்கொடி ஏற்றுவதும் , தேசியகீதம் பாடுவதும் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
2022ம் ஆண்டு, இரண்டாவது முறையாக தொடர்ந்து மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் , கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியக் கூட்டத்தைக் கூட்டினார். வாரியத் தலைவர் இஃப்திகார் அஹ்மத் ஜாவெத் (Iftikhar Ahmad Javed) தலைமையேற்று நடத்திய இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மதரஸாக்களில் நடக்கும் சட்ட விரோத செயல்பாடுகள் குறித்து பல மாதங்களாக கண்காணித்து வந்த உத்தரபிரதேச மாநில அரசு, கடந்த அக்டோபர் மாதம், வெளிநாட்டில் இருந்து மதரஸாக்களுக்கு நிதியுதவி வருவது குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்தது.
உத்தரப்பிரதேச மாநில அரசு அமல்படுத்திய மதரஸா கல்வி வாரியச் சட்டம்- 2004 மற்றும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (திருத்தம்) சட்டம் 2012 ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிரானது என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்நிலையில் தான், அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர், உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டத்தை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், இந்த சட்டம் மதசார்பின்மை விதிமுறைகளை மீறுகிறது என்றும், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் கூறிய நீதிபதி விவேக் சவுத்ரி மற்றும் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மதரஸா கல்வி வாரிய சட்டத்தை ரத்து செய்தது. மேலும் மதரஸாவில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஏப்ரல் 5ம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தது.
மதரஸா சட்டத்தை உயர்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், மதரஸாக்களை ஒழுங்குப்படுத்துவதே மதரஸா கல்வி வாரியச் சட்டத்தின் நோக்கம் என்பதால் மதரஸாக்கள் சட்டத்தையே ரத்து செய்து சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளிக்க முடியாது” என உத்தரவிட்டது.
இந்தச் சூழலில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில், குழந்தைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்கத் மதரஸாக்கள் தவறிவிட்டதாகவும், பாடத்திட்டத்தில் சில என்சிஇஆர்டி புத்தகங்களைச் சேர்க்காமல் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
மதரஸாக்களின் ஆசிரியர்களின் திறமையின்மையைச் சுட்டிக்காட்டிருக்கும் NCPCR, மதரஸாவில் கல்வி படிக்கும் பிற மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இஸ்லாமிய மதக் கல்வியை வழங்குவது அரசியலமைப்பின் 28(3) பிரிவை மீறுவதாகும் என்று தெரிவித்திருக்கிறது.
“தாருல் உலூம் தியோபந்த் மதரஸாவின் மத மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் தாலிபான் தீவிரவாதக் குழுக்களால் ஆதிக்கம் செய்யப்படுவதாக கூறிய NCPCR , அதற்கு தியோபந்த் மதரஸாவில் ஷரியா சட்டம் மூலம் பழமைவாத கருத்துக்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதை எடுத்துக்காட்டி உள்ளது.
மதரஸாக்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மதரஸாக்களுக்குச் செல்லும் குழந்தைகள் மதிய உணவு, சீருடை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போன்ற அடிப்படை உரிமைகளை இழக்கின்றனர் என்பதையும் இந்த பிராமண பத்திரம் எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக மதரஸா வாரியங்களைக் கொண்ட பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் குழந்தை உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது.
என்சிபிசிஆர் தனது பிராமண பத்திரத்தைத் தாக்கல் செய்த பின்னர், இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மனுக்கள் விரைவில் விரிவாக பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.