ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கடந்த இரு நாட்களுக்கு முன் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நாங்கள் தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்த காலத்தில் இருந்து முன்வைத்து வரக்கூடிய கருத்து தான் . புதிதாக பேசவில்லை. மூப்பனாரோடு கைகோர்த்து தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த போது நாங்கள் வைத்த முழக்கம் கடைசி மக்களுக்கு ஜனநாயகம், எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதுதான்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை திருமாவளவன் வைக்கிறார். அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன் என மூப்பனாரே 1999 ஆம் ஆண்டில் பேசியிருக்கிறார்.
அதை நினைவுப்படுத்தி தான் செங்கல்பட்டில் இரு நாட்களுக்கு முன்பு பேசினேன். அந்தப் பேச்சை எடுத்து என்னுடைய அட்மின் பதிவு செய்து விட்டார்கள் என்று கருதுகிறேன். அந்த பதிவை ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. இன்னும் நான் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை.
நாங்கள் மது ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் மகளிர் மாநாடு அக்டோபர் இரண்டில் நடத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் மதுவிலக்கு கொள்கை உடைய கட்சிகள் தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் நீக்கப்பட்ட வீடியோவை திருமாவளவன் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில், கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! – என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம் என தெரிவித்துள்ளார்.