பொதுவாக, எந்த சிவாலயமாக இருந்தாலும் அந்த கோயிலில் லிங்க வடிவில் அருள் புரியும் சிவபெருமானுக்குத் தான் முதன்மை வழிபாடு. ஆனால், ஓரே ஒரு ஈஸ்வரன் கோயிலில் மட்டும், அம்மனுக்கு முதன்மை பூஜையும், திருவிழாவும் நடக்கிறது. அப்படி ஒரு அற்புத கோயிலைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் அருகே கடற்கரை கிராமமான குலசேகரன்பட்டினத்தில், குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னன் கட்டிய முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது.
உடம்பில் ஏற்படும் அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மனாக திகழ்வதால் இந்த அம்மன் முத்தாரம்மன் என்று போற்றப்படுகிறாள்.
முன்னொரு காலத்தில், அகத்திய மாமுனியின் சாபத்தால், அசுரக் குலத்தில், எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட மகிஷனாக, வரமுனி என்ற முனிவர் பிறந்தார்.
கடும் தவம் செய்து, சிவபெருமானிடம் வரம் பெற்றான் மகிஷாசுரன். ஈசனிடமே வரம் பெற்ற ஆணவத்தால், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பெரும் துன்பங்கள் விளைவித்து வந்தான். தேவர்களும், மகிஷாசுரனின் துன்பம் தாங்க முடியாமல் ,முனிவர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். அம்மையை அழைத்து, தேவர்களின் குறையைப் போக்குமாறு ஈசன் சொல்ல, பார்வதி தேவியும் தேவர்களுக்கு அபயம் அளித்தாள்
இதனையடுத்து, மகிஷாசுரனின் தொல்லைகளிலிருந்து விடுபட முனிவர்கள் யாகம் மேற்கொண்டனர்.
அந்த யாகத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பார்வதியே அரண் அமைத்துக் கொடுத்தாள். முறைப்படி நடந்த யாகத்தில் ஒரு பெண் குழந்தையாக ஸ்ரீ லலிதாம்பிகையாக தோன்றிய அம்மை, அந்த வேள்வியிலேயே ஒன்பது நாட்கள் தொடர்ந்து வளர்ந்தார். யாகத்தில் தோன்றிய அம்மை, பத்தாவது நாளில், மகிஷாசுரனை வதம் செய்தார். மகிஷாசுரனை வதம் செய்த அம்மை ஈசன் திருமேனியின் இடப் பாகத்தில் சுயம்புவாகத் தோன்றியருளினாள்.
இப்படி, சுயம்புவாக தோன்றிய ஐயனும், அம்மையும் இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஞானமூர்த்தீஸ்வரர் இடது காலை மடக்கிய நிலையில் இரண்டு திருக்கரங்களுடன், வலக்கரத்தில் செங்கோலும், இடக்கரத்தில் விபூதிக் கொப்பரையும் கொண்டு அருள்பாலிக்கிறார்.
முத்தாரம்மன் வலது காலை மடக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன், வலது மேல் கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் நாகபாசமும், கீழ் கரத்தில் விபூதி கொப்பரையும் கொண்டுள்ளாள்.
இக்கோயிலில்,அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர் என்பதால், இது ஏக பீட, சக்தி பீடம் என்று போற்றப்படுகிறது. மேலும் இக்கோயிலில், கடலே தீர்த்தமாக அமைந்திருக்கிறது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாத அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியில் கொடியேற்றத்துடன் தொடங்கும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும்.
நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் முத்தாரம்மன் துர்க்கையாகவும், இரண்டாம் நாள் விஸ்வகர்மேஸ்வரராகவும், மூன்றாம் நாள் பார்வதிதேவியாகவும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியராகவும், ஐந்தாம் நாள் கிருஷ்ணராகவும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் நடராஜராகவும், எட்டாம் நாள் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாள் சரஸ்வதியாகவும் காட்சி தந்து வீதி உலா வருவது அருள்மயமாக அமைந்திருக்கும்.
பத்தாம் நாள் விஜயதசமியில் இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், சூரசம்ஹாரத்துக்குக் கொண்டு செல்லப்படும் சூலத்துக்கும் பூஜைகள் நடைபெறும்.அன்றிரவு இரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக எழுந்தருள்வாள். அங்கு அம்மைக்குச் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
அதன்பிறகு, முத்தாரம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்து அருள் புரிவாள்.
11-ம் நாள் அதிகாலையில் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். திருவீதியுலா வந்த அம்மன் மாலையில் கோவிலை வந்தடைந்ததும், கொடியிறக்கப்பட்டவுடன் அம்மனுக்கு காப்பு களையப்படும்.
சுமார் 5 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரம் நடக்கும்போது கடற்கரையில் கூடியிருந்து அம்மனை வழிபட்டு அருள் பெறுகிறார்கள்.
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் சக்தியாக முத்தாரம்மன் விளங்குகிறாள். குறிப்பாக உடலில் அம்மை நோய் முத்து முத்தாக இருந்தால், ஆமணக்கு விதை வாங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்து கின்றனர். பொடிப் பொடியாக இருந்தால் அரிசியும், தடிமனாக இருந்தால் பூசணிக்காயும் வாங்கி முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் முத்தாரம்மனை வணங்கினால் எல்லா நன்மையும் நடக்கும் என்கிறது தலபுராணம்.
நவராத்திரி காலத்தில், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மனை வழிபட்டு நாமும் நலம் பெறுவோம்.