பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்…
Disco Dancer படத்தில் இடம்பெற்ற அந்த ஒற்றை பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர்தான், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி.
தெருக்களில் சாதாரணமாக பாடித்திரியும் இளைஞன், எப்படி மிகப்பெரிய டிஸ்கோ டான்சராக மாறுகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்தியாவை தாண்டி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த திரைப்படம் வசூலை குவித்தது. அதன்மூலம், உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை Disco Dancer திரைப்படம் பெற்றது.
மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் 1950ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பிறந்தவர், மிதுன்தா என அழைக்கப்படும் மிதுன் சக்ரவர்த்தி. தொடக்கத்தில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர், எஃப்.டி.ஐ.ஐ எனப்படும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணைந்து தனது நடிப்பு திறமையை மெருகேற்றிக் கொண்டார்.
அதன் பின்னர், “மிரிகயா” என்ற திரைப்படத்தின் மூலம் மிதுன் சக்ரவர்த்தி திரையுலகில் கால்பதித்தார். மிருணாள் சென் இயக்கியிருந்த அந்த படத்தில், சந்தால் என்ற பழங்குடியினத்தை சேர்ந்த கிளர்ச்சியாளராக அவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. மேலும், முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவும் அந்த படம் காரணமாக அமைந்தது.
1980களில் மிதுன் சக்ரவர்த்தி நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டானது. இதனால், மிகவும் பிசியான நடிகராக உருவெடுத்தார். குறிப்பாக, 1989ஆம் ஆண்டு மட்டும் 19 படங்களில் நடித்து, ஒரே ஆண்டில் அதிக படங்களை நடித்த நடிகர் என்ற லிம்கா சாதனையை அவர் படைத்தார்.இதுவரை 3 தேசிய விருதுகளை வென்றுள்ள அவரின் தனித்துவமான நடனத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்தி, பெங்காலி, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். 2016ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நாகாக்க” என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அவர் கால் பதித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரசில் இணைந்த மிதுன் சக்ரவர்த்தி அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்து பயணித்து வருகிறார்.திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி அண்மையில் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.