சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி அதிக மக்கள் நேரில் பார்வையிட்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற நிலையில், இது லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸிலும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையில் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த வான் சாகச நிகழ்ச்சி பிற்பகல் 1 மணியளவில் நிறைவுபெற்றது.
இதில் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பல்வேறு சாகசங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த வான் சாகச நிகழ்ச்சியைக் காண, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக் கணக்கான மக்கள் குவிந்ததால் மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
இந்நிலையில், அதிக மக்கள் நேரில் பார்வையிட்ட நிகழ்ச்சி என்ற பெருமையை விமானப்படை நடத்திய வான் சாகச நிகழ்ச்சி பெற்றுள்ளது. இதன் மூலம் இது லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.