இந்தியா – கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம்.
2023-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி…
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள குருத்துவாராவின் CAR PARKING-ல் ஒருவர் கொல்லப்படுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது பெயர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த அவர், 1990-களில் போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. குறுகிய காலத்திலேயே கனடாவில் உள்ள சீக்கியர்கள் மத்தியில் பிரபலமானார் ஹர்தீப்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான SIKHS FOR JUSTICE-ல் இணைந்து செயல்பட்டதால் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது NIA.
இந்த நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் ஹர்தீப் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா – கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜாரின் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாடாளுமன்றத்திலேயே குற்றம்சாட்டினார். நம்நாட்டு குடிமகனின் கொலையில் அந்நிய அரசின் பங்கு இருப்பதை ஏற்க முடியாது என்றும், இது கனடாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் ட்ரூடோ கூறினார்.
இதனையடுத்து கனடாவில் இருந்து வெளியேறும்படி இந்திய தூதரக அதிகாரி பவன்குமாருக்கு உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.
கனடாவின் நடவடிக்கைக்கும் குற்றச்சாட்டுக்கும் பதிலடி கொடுத்த இந்தியா, அந்நாட்டின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றை நிராகரிப்பதாகவும், நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்தது.
கனடாவில் கொலை, ஆள்கடத்தல் மற்றும் ORGANISED CRIME-கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல, இதுபோன்ற குற்றங்களில் இந்தியாவை தொடர்புப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று கூறிய மத்திய அரசு, கனடா தூதரக அதிகாரி OLIVER SYLVESTER நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. மேலும் கனடா மக்களுக்கு விசா வழங்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
சிறிது காலம் அடங்கிப்போயிருந்த இந்த மோதல் தற்போது மீண்டும் வெடித்திருக்கிறது. நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதரக அதிகாரி சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் அதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் கனடா தகவல் அனுப்பியதே அதற்கு காரணம்.
அந்நாட்டின் செயலால் கோபமடைந்த இந்தியா, 36 ஆண்டுகள் தூதரக அதிகாரியாக பணியாற்றிய சஞ்சய் குமார் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி கனடா அவமதிப்பதாக தெரிவித்துள்ளது. தங்கள் தூதர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் அவர்களை திரும்ப அழைப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ள இந்தியா, கனடா தூதர்கள் 6 பேரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவதாக அறிவித்தது. அதனால் இந்திய தூதர்களை வெளியேற்றுவதாக கனடாவும் தெரிவித்தது.
இதற்கிடையே தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு காவல்துறை பரபரப்பு புகாரை முன்வைத்தது. அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், எதிர்வரும் தேர்தலில் தோல்வி அடையும் நிலையில் இருப்பதால், கனடாவில் வசிக்கும் சீக்கியர்களின் வாக்குகளை கவர ஜஸ்டின் ட்ரூடோ நாடகமாடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தலில் அவர் தோல்வி அடைவார் என்றும் அதன்பிறகு இந்தியா – கனடா உறவு மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கனடாவின் செயலுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனடாவின் குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை என்றும், அதுதொடர்பான விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும் தெரிவித்தார்.
கடந்தாண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பண்ணு என்பவரை இந்தியாவைச் சேர்ந்தவர் கொலை செய்ய முயன்றதாக புகார் எழுந்தது. எனவே இந்த விவகாரத்தில் கனடாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா – கனடா இடையிலான மோதல் அந்நாட்டில் வாழும் இந்தியர்களை பதற்றமடையச் செய்துள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.