காலிஸ்தான் தீவிரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இந்தியாவின் முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், விகாஷ் யாதவைத் தேடப் படும் குற்றவாளியாக அமெரிக்க FBI அறிவித்துள்ளது. யார் இந்த விகாஷ் யாதவ் ? விகாஷ் யாதவ் மீது அமெரிக்க சொல்லும் குற்றச் சாட்டுக்கள் என்னென்ன ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஞ்சாபை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே காலிஸ்தான் தீவிரவாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே இந்தியாவில், காலிஸ்தான் சார்புடைய இயக்கங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும், அந்நிய நாடுகளில் இருந்த படி, காலிஸ்தான் இயக்கத்தினர், இந்தியாவுக்கு எதிராக வெளிப் படையாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கனடாவிலும், அமெரிக்காவிலும் காலிஸ்தான் இயக்கத்தினர் சுதந்திரமாக இயங்கி வந்தனர்.
அப்படி ஒருவர் தான் அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னூன். நியூயார்க்கை சேர்ந்த வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் பன்னூன் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் ஆலோசகராக இருக்கிறார். இந்தியாவில் வன்முறைக்கு நிதியுதவி செய்ததற்காகவும், காலிஸ்தான் பிரிவினை உணர்வை தூண்டியதற்காகவும், குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் வைத்து, குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதி நடந்தது. இந்தப் படுகொலைச் சதியில் இந்திய ரா அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியாவிடம் அமெரிக்க தகவல் தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக மறுத்தது.
இதைத் தொடர்ந்து, மன்ஹட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், விகாஷ் யாதவ் இந்திய ரா அதிகாரி என்றும் நிகில் குப்தா என்பவருடன் சேர்ந்து பன்னுனைக் கொல்ல சதி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் விகாஷ் யாதவ், பன்னூனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும் , நிகில் குப்தாவை வேலைக்கு அமர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குர்பத் வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய இருவரும் அமெரிக்காவில் உள்ள கொலையாளி ஒருவரை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தருவதாக தெரிவித்துள்ளனர் என்றும், அதற்கு முன் பணமாக 15000 அமெரிக்க டாலரையும் தந்துள்ளனர் என்றும், அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது. மேலும், ஹரியானாவைச் சேர்ந்த விகாஷ் யாதவ் பெயர் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளது.
FBIயின் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு எதிராக பழிவாங்கும் வன்முறை சார்ந்த முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட விகாஷ் யாதவ் ,இந்திய அரசின் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும்,மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அமெரிக்கா பகிர்ந்து கொண்ட தகவல்களை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், விகாஷ் யாதவ்வுக்கு, வாடகைக்கு கொலை செய்ய சதி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மற்றும் பணமோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது