மக்களவையில் நமது உரிமை குறையும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், நாம் ஏன் 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ள கூடாது என்ற கேள்வி எழுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மையூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று திருமணங்களை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், திருக்கோயில்களுக்கு எதிரான வழக்குகளை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக கையாண்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 226 கோயில்களின் திருப்பணிகளை முடித்து, அவற்றின் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தியிருப்பது தமிழக அரசின் மிகப்பெரிய சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற இருக்கைகள் மக்கள் தொகையைப் பொறுத்து குறையும் என்ற சூழலில், மக்களவையில் நமது உரிமைகள் குறைவதை தடுக்க நாம் ஏன் 16 குழந்தைகளை பெற்றெடுக்கக் கூடாது என்ற கேள்வி எழுவதாக தெரிவித்தார்.