நவநாகரீக உடைகள் ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுப்புது டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டாலும், தமிழ்நாட்டை சேர்ந்த இல்லத்தரசிகளின் எவர் கிரீன் சாய்ஸ் சேலைகளாகத் தான் இருக்கின்றன. பல ஆயிரங்கள் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை வாங்கும் பெண்கள் ஒருபுறம் என்றால், எடை குறைவான, விலை அதிகமில்லாத காரைக்குடி சுங்குடி சேலைகளுக்கு தனி மவுசு ஜவுளி சந்தையில் இருக்கிறது…. இந்த காரைக்குடி சேலை தயாரிப்பு பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் நெசவாளர்களின் உழைப்பு பற்றியும் விளக்குகிறது இந்த தீபாவளி சிறப்புத் தொகுப்பு….
வானவில் வண்ணங்களில் மட்டுமல்ல அதனைத் தாண்டியும் தங்களின் சேலைகளில் ஏராளமான வண்ணங்கள் இருப்பதாக கூறுகின்றனர் செட்டிநாடு கைத்தறி சேலைகளை நெசவு செய்யும் நெசவாளர்கள்…
தொடக்க காலங்களில் கண்டாங்கி சேலை என்றழைக்கப்பட்ட செட்டிநாடு சேலைகள், பின்னர் காலச் சூழலுக்கு ஏற்ப, பெண்களின் ரசனைக்கு ஏற்ப அதன் பெயரும், வடிவமைப்பும் மாறியது…..
ஆனால், இந்த செட்டிநாடு சேலைகளின் மிகப்பெரிய பிளஸ் என்றால், அதன் எடையைத் தான் கூறுகின்றனர். வெறும் 300 முதல் 400 கிராம் எடையில் இருக்கும் இந்த சேலைகள், முழுக்க முழுக்க பருத்தி இலைகளால் உருவாக்கப்படுவதால், அனைத்து கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில் இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நெசவாளர்கள் சேலைகள் தயாரித்து வந்தாலும் காரைக்குடி மற்றும் அதன் அருகே உள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள் ளிட்ட பகுதியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் தயாரிக்கும் செட்டிநாடு காட்டன் சேலைகளுக்கு தனி மவுசு உண்டு.
ஆண்டு முழுவதும் கைத்தறி சேலைகள் தயாரிப்பில் இங்குள்ள நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைத்தறி நெசவாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு அன்னபச்சி ரகம், தாழம்பூ பூக்கரை ரகம், செட்டிநாடு ஸ்பெஷல் கோட்டையூரான் பார்டர் ரகம், செல்ப்முந்தி ரகம் உள்ளிட்ட பல டிசைன்களில் சேலைகள் தயாரித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இளம் பெண்கள் அணியக் கூடிய சுடிதார், சல்வார் வகைகளையும் இப்பொழுது தயாரித்து வருகின்றனர். இந்த செட்டிநாட்டு சேலைகளின் விலை ரூ.700 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.