தமிழகத்தில் தினசரி நடைபெறும் படுகொலைகள் கவலை அளிப்பதாகவும், மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
தமிழகத்தில் நாளிதழ்களும் , தொலைக்காட்சிகளும் பக்கம் பக்கமாக எழுதவும், நேரலை செய்யவும் பஞ்சமில்லாத அளவுக்கு நாளுக்கு நாள் பெருகிவரும் படுகொலைகள், கூலிப்படை கொடூரம், கொலையாளிகள் சரண்டர் என்பன போன்ற செய்திகள் வருகின்றன. பொதுவாக இத்தகைய கொலைகளுக்கு காரணம் தனிப்பட்ட விரோதம் என்ற காரணத்தை தமிழக அரசும் தமிழக காவல்துறையும் கூறி சமாதானம் தேடுகிறது.
இத்தகைய குற்றங்களை காவல்துறை முன்கூட்டியே கணிக்க முடியாது அல்லது தடுக்க முடியாது என கூறுவது சிறுபிள்ளை தனமான கருத்து என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். கொடூர குற்றவாளிகளை தண்டிப்பதில் காட்டும் அலட்சியம், குற்ற செயல் செய்வதற்கு தைரியத்தை கொடுக்கிறது என்பது உளவியல் உண்மை.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்கிறது. பள்ளி முதல் ரயில், விமானம் வரையிலான குண்டு மிரட்டல் தொடர்கிறது. இதுவரை அத்தகையோர் மீதான எடுத்த நடவடிக்கை என்ன? கூலிப்படை அட்டூழியம் ஒருபுறம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீரியல் கொலைகள் அதிகரித்துள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என தொடர் கொலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பார்க்கிறோம்.
தமிழக அரசு வெட்கமே இல்லாமல் முந்தைய அரசின் புள்ளி விவரத்துடன் இப்போது நடைபெறும் படுகொலைகளை ஒப்பிட்டு நியாயப்படுத்துவதும் நடக்கிறது.
மருத்துவர்கள் மீது, ஆசிரியர்கள் மீது, வழக்கறிஞர்கள் மீது என ஒவ்வொரு நாளும் நடக்கின்ற கொடூர குற்றங்களை பார்க்கும்போது தமிழகத்தில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
கொடூர குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் விரைந்து செயல்பட வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை. ஆனால் காவல்துறையோ திமுகவின் ஏவல் துறையாக பொது கூட்டத்தில் பேசியவர்கள், சமூக ஊடகங்களில் கருத்தினை பகிருபவர்கள் மீது கண்ணும் கருத்துமாக தாங்களாகவே கற்பனை சசெய்துகொண்டு வழக்கு பதிவு செய்கின்றனர். அவர்களை பிடிக்க தனித்தனிப்படைகள் அமைத்து மாநில விட்டு மாநிலம் போய் நள்ளிரவில் கைது செய்து பரபரப்பு நாடகத்தை நன்றாகவே நடத்துகின்றனர். இதுதான் காவல்துறையின் சீரிய பணியா?
சமீபத்தில் நெல்லை மேலப்பாளையம் சினிமா தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அல்உம்மா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் குற்ற செயலில் ஈடுபட்டதால் தானே இவர்களின் பின்புலம் தெரியவந்தது. இந்நிலையில் சிறையில் இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய ஓட்டு வங்கி அரசியலால் தமிழகம் ஆபத்தான நிலையில் இருப்பதை தமிழர்கள் உணர வேண்டும்.
இத்தகைய கொடூர கொலைகளுக்கு என்ன வேண்டுமானாலும் காரணம் சொல்லலாம். ஆனால் ஈவிரக்கமற்ற கொடூர மனநிலைக்கு செல்வதற்கு என்ன காரணம் என்பதை சிந்திக்க வேண்டும். சினிமா, தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் இடம்பெறுவதை பார்க்கிறோம். கொடூர கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிதாபத்திற்கு பதில், பழிக்கு பழியாக மீண்டும் கொடூரச் செயல்களில் ஈடுபட்டு அதற்கு நியாயம் கற்பிப்பதை பார்க்கிறோம்.
பள்ளி கல்லூரிகளில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. மாணவர்களிடம் நல்லொழுக்கம் வளர்வதற்கு பதில் போதை பழக்கம் வேகமாக வளர்கிறது. திராவிட சித்தாந்த திணிப்பு மாணவர்களிடையே சாதி, மத, மொழி உணர்வுகளை தூண்டுகிறது என்பதை பார்க்கிறோம்.
அதிலும் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மாணவிகளுக்கு மதுவை ஊற்றி கொடுத்து பாலியல் அட்டூழியம் செய்கின்ற. எந்த குற்றமாக இருந்தாலும் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற அளவுகோலில் தான் தமிழக அரசின் நடவடிக்கை இருக்கிறது என்பது கேவலமான உண்மை. பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது புகார் என்றவுடன் பாய்ந்து கேவலபடுத்திய ஆளும் திமுக ஆட்சி, சிறுபான்மை பள்ளிகளில் நடந்த பாலியல் குற்றங்களை மறைக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று பல லட்சம் செலவு செய்து ஓட்டு வங்கி நாடகம் ஆடுகிறது. பொய்யான என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளை சீரழித்தது மற்றுமொரு கொடூரம்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கொடூர செயல்களின் பட்டியல் நாம் தர முடியும். அந்த கொடூர நிகழ்வுகளை ஊடகத்தின் மூலம் மக்கள் உணராமல் இருப்பதற்கு உடனே இந்தி திணிப்பு, பார்ப்பன ஆதிக்கம், மாநில உரிமை புறக்கணிப்பு போன்ற திமுகவின் தேய்ந்த ரிக்கார்ட்டில் இருந்து ஒன்றை வெளியிடுவது திமுகவின் வாடிக்கை. இதையும் ஊடகங்கள் சிரமேற்கொண்டு விவாத பொருளாக்கி வருவதை பார்க்கிறோம்.
தமிழகத்தில் அரங்கேறி வரும் கொடூர குற்றச் செயல்கள் பற்றி நல்லவர்கள் கவலைபட வேண்டும், கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறது.
தமிழகம் ஆன்மிக பூமி, தர்ம பூமி. எனவே தொடரும் இத்தகைய மனிதாபிமானமற்ற வன்முறைகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க மாணவர்களிடையே நல்லொழுக்கம், ஆன்மிகம், உயிர்களிடத்தில் அன்பை ஏற்படுத்தும் பண்பை வளர்க்க முயற்சி செய்வோம்.
சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முழு சுதந்திரத்தை தமிழக காவல்துறைக்கு தமிழக முதல்வர் வழங்க வேண்டும். குற்ற செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலையை நீதிமன்றம் உறுதி செய்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.
மக்களும் தங்கள் கண்முன் நடக்கும் அட்டூழியத்தை சகித்துக்கொள்ளாமல் எதிர்ப்பைத் தெரிவிக்க, கண்டிக்க முன்வர வேண்டும்.இத்தகைய நிலையை மாற்றுவது நமது ஒவ்வொருவரின் கைகளிலும் உள்ளது என்பதை உணர வேண்டும்.
எனவே தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், தமிழக காவல்துறையும் பொது மக்களும் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழகத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படுத்திட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.