விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டத்தில், கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்பின் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதில், கோயில்களில் தூய்மையான பூஜை பொருட்களை இறைவனுக்கு வழங்குவது, தல வரலாற்றை மாற்றி எழுதுவதைக் கண்டிப்பது, இந்து கோயில்களை அறநிலையத்துறை பிடியிலிருந்து மீட்பது உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார், கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஜனவரி 5-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும், பின்னர் நாடு தழுவிய அளவில் போராட்டம் வலுபெறும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் ஸ்தானுமாலயன் அளித்த பேட்டியில், மதசார்பற்ற அரசு ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தை நிர்வகிப்பது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.