ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட உறுதுணையாக இருந்துள்ளது சென்னை சேப்பாக்கம் மைதானம்… எப்படி? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2025-ம் ஆண்டிற்கான மெகா ஏலத்தில், அதிக தொகைக்கு அதாவது 27 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் தக்க வைத்திருக்கும் அதே நேரத்தில், ஐபிஎல் தொடர் தொடங்கியதற்கு பிறகு பிறந்த ஒரு சிறுவன் மிகக் குறைந்த வயதில் ஏலம் எடுக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பீஹார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, நடந்து முடிந்துள்ள பரபரப்பான ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இவர் இப்போது பேசு பொருளாகியிருப்பதன் முக்கிய காரணமே, இவரது வயது தான். வெறும் 13 வயது மட்டுமே நிறைந்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றிலேயே இளம் வயதில், ஒரு அணிக்காக களமிறங்கும் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
வைபவின் அடிப்படை விலை ரூபாய் 30 லட்சத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இவரை வாங்குவதற்கான விருப்பத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் வெளிப்படுத்திய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விருப்பம் காட்டியது.
சுவாரஸ்யமான இந்த ஏலத்தில் ரூபாய் 1 கோடி வரை இரு அணிகளும் மோதிய நிலையில், 1 கோடியை நெருங்கியதும் டெல்லி அணி பெடல் ஏலத்தொகை உயர்த்துவதை நிறுத்தியது. இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வைபவ் சூர்யவன்சியை 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வசப்படுத்திக் கொண்டது.
ஐபிஎல் ஏலத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்ட வைபவ்-இன் திறமையை வெளி உலகிற்கு கொண்டு சேர்க்க துணை நின்றதே சென்னை தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சென்னை சேப்பாக்கம் MA சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக நடைபெற்ற 4 நாள் U19 டெஸ்ட் போட்டியில், இந்தியா U19 அணிக்காக களமிறங்கினார் வைபவ்.
ஆஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த வைபவ் சூர்யவன்சி, வெறும் 58 பந்துகளில் சதம் விளாசி அற்புதம் நிகழ்த்தினார். வைபவ் இன் இந்த அசாத்திய திறமை மீது நம்பிக்கை கொண்டிருந்த பீஹார் கிரிக்கெட் சங்கம் அவரது பெயரை ஐபிஎல் மெகா ஏலத்தில் சேர்க்கவே, அதற்கு பலன் தரும் வகையில் தற்போது அடிப்படை விலையான 30 லட்சத்தில் இருந்து 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்படுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிரடி காட்டிய வைபவ் மீது நம்பிக்கை வைத்து, அவரை ஏலத்தில் வாங்கியுள்ள ராஜஸ்தான் அணியின் சி.இ.ஓ ஜேக் லஷ் மெக்ரம், வைபவ் குறித்து பேசுகையில், “அவர் ஒரு அபாரமான திறமைசாலி, நீங்கள் நிச்சயமாக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், அப்போது தான் அவர் ஐபிஎல் வரை முன்னேறி இருக்க முடியும். அவரைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்கு வரும் மாதங்களில் நிறைய வேலைகள் எங்களுக்கு இருக்கும், ஆனால் ஒரு திறமைசாலியை எங்கள் அணியில் ஒரு பகுதியாக வைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நாளுக்கு நாள் இளம் தலைமுறையின் ஆதிக்கம் உள்ளூர் முதல் சர்வதேச கிரிக்கெட்களில் தலை தூக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், சென்னை சேப்பாக்கம் மைதானம் வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் வாழ்க்கையை உயர்த்தியுள்ளது மட்டுமல்லாமல், அவரை இந்த உலகிற்கு வெகு விரைவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்…
*Go and blast with the bat young man*