இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே மதம் மாறுவதை, இந்திய அரசியலமைப்பின் மீதான மோசடி என்று கூறிய உச்ச நீதிமன்றம், மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் சாதி ஏற்றத்தாழ்வுகளினால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சட்டமாகும். அதாவது, ‘இந்து’ என்ற அமைப்பில் வாழ்ந்து வரும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே இந்த சட்டம்.
இந்த அடிப்படையில் தான் இடஒதுக்கீடானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்திய அரசியலமைப்பின் பட்டியலின சாதிகள் திருத்த ஆணை 1950 ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது.
யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்ஸி இல்லையோ அவரை ‘இந்து’ என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். அதன்படி மத ரீதியாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்வோருக்கு இட ஒதுக்கீடு என்பது பொருந்தாது என்பதே சட்டம்.
1950-களிலேயே கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதற்கு , குடியரசுத் தலைவர் ஆணை வரவில்லை.
ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து உள் இடஒதுக்கீடாக மத அடிப்படையில் இட ஒதுக்கீடு சில அரசுகளால் வழங்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட இந்துகள். நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம், மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, அவை சட்ட விரோதமானது என்று பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. அதையே தான் இப்போது உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக ஆணை பிறப்பித்துள்ளது. எந்த வழக்கில் என்ன தீர்ப்பு என்பதை பார்க்கலாம் .
புதுச்சேரி அரசுப் பணியில் மேல் பிரிவு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர் தனது தந்தை இந்து என்றும், தாய் கிறித்தவர் என்பதால் தான், ஒரு இந்து என்று கூறி தனக்கு எஸ்.சி. சாதி சான்றுதழ் வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் , மேற்கொண்ட விசாரணையில், செல்வராணியின் தந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் கிறித்தவ மதத்துக்கு மாறியது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் மறுத்துவிட்டார்.
இதனையடுத்து செல்வராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தான் சிறு வயது முதல் இந்து மதத்தை பின்பற்றுவதாகவும், இந்துமதத்துக்கு உட்பட்ட வள்ளுவன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறிருந்தார். மேலும், கிறித்தவ மதத்துக்கு மாறினாலும், பின்னர் தான் சார்ந்த இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே, தனது தந்தை, சகோதரர் ஆகியோர் எஸ்.சி சாதி சான்றிதழ் வைத்துள்ளனர் என்றும், அதனால் தனக்கும் எஸ்.சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் விண்ணப்பம் வைத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்வராணி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, ஞான ஸ்நானம் பெற்று, சிறு வயது முதல் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே சலுகையை பெறுவதற்கான எஸ்.சி சாதி சான்றிதழ் வேண்டுவதை ஏற்க முடியாது. என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், செல்வராணிக்கு சாதி சான்றிதழ் வழங்க முடியாது என தீர்ப்பளித்து செல்வராணியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, செல்வராணி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதி பங்கஜ் மிட்டல் மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. செல்வராணியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
மதசார்பற்ற இந்த நாட்டின் குடி மக்களுக்கு எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு முழு உரிமை இருக்கிறது என்று கூறிய நீதிபதிகள், ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக வாழும் ஒருவர் இட ஒதுக்கீட்டு சலுகைகளுக்காக தன்னை இந்துவாக அடையாளம் காட்ட முடியாது என்றும் இட ஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மதம் மாறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது என்றும், சலுகைகளைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மதம் மாறுவது என்பது அரசியல் சாசனத்தின் மீதான மோசடி என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மனுதாரரின் இரட்டை கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.சி சாதி சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே எனக்கூறி செல்வராணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இட ஒதுக்கீடு நலன்களைப் பெற மத மாற்றத்தை மேற்கொள்ளும் ஒருவரின் நோக்கம் சமூக நீதிக்கொள்கையை சிதைத்து விடும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உரக்க சொல்லி இருக்கிறது.