மியான்மரை சேர்ந்த பெண்ணுக்கும், அரியலூரைச் சேர்ந்த இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடந்த திருமணத்தில், வீடியோ கால் மூலம் பெண்ணின் பெற்றோர் ஆசீர்வாதம் வழங்கினர்.
அரியலூர் அருகே ரசலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதிவதனன் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மதிவதனனுக்கும், உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மியான்மரை சேர்ந்த ஏய்ஏய் மோ என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்த இந்த ஜோடிக்கு, ஃபிளக்ஸ் பேனர் அடித்து ஆச்சரியப்படுத்தினர் மதிவதனின் நண்பர்கள்….
தமிழ் முறைப்படி காதலரை கரம்பிடிக்க முடிவெடுத்த மியான்மர் பெண்ணான மோ, இதற்காக காஞ்சிப்பட்டு உடுத்தி, தமிழ்ப் பெண் ஆகவே மாறினார். தாலி கழுத்தில் ஏறிய அந்த நொடியில், மோவின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது.
மோவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், பெற்றோர் இருவரும் திருமணத்திற்கு நேரில் வரவில்லை. எனினும், வீடியோ காலில் தங்களின் மகளையும், மருமகனையும் அவர்கள் ஆசீர்வதிக்க தவறவில்லை.