உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த ராணுவ பொதுத்துறை நிறுவனத்தின் உதவியுடன் உள்நாட்டிலேயே மூன்று அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டன.
துனகிரி, சன்ஷோதக், அக்ரே என பெயரிடப்பட்டுள்ள போர்க்கப்பல்களை கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கடல்சார் வலிமையை வலுப்படுத்துவதிலும், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவு அடைவதிலும் போர்க்கப்பல்கள் ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்தார்.
வலிமையான கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ள போர்க்கப்பல்கள் இந்தியாவின் பயணத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என கூறினார். 3 போர்க்கப்பல்களை உருவாக்கியதில் 200க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நாட்டில் கடல்சார் வலிமை வலுவாக இருக்கிறதோ, அந்த நாடு வலுவான பொருளாதாரத்தை கொண்டிருக்கும் என்ற யதார்த்தத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களும் நமது திறன்கள் மற்றும் ஆற்றலுக்கு ஒரு சிறந்த சான்று என பிரதமர் மோடி கூறினார்.
















