சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு 398 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து இ-சேவை மையங்களும் ‘இ-சேவை 2.0’ ஆக மேம்படுத்தப்படும் என்றும், வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்த அவர், சென்னையின் மின் பகிர்மான திறன் ஆயிரத்து 390 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும் என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் செலவில் 20 ஆயிரம் பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அரசு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தடையற்ற மற்றும் தரமான மின் விநியோகத்திற்காக 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க ஆயிரத்து 543 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்,
2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 40 ஆயிரம் பழைய மின் மாற்றிகள் மாற்றப்பட உள்ளதாகவும், மின்சாரத் துறைக்கு மொத்தம் 18 ஆயிரத்து 860 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
















