மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 38-வது பட்டமளிப்பு விழாவில் , ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பட்டம் என்பது சமுதாயத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான ஒரு படிக்கல் என தெரிவித்தார். கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதோடு நின்றுவிடக்கூடாது எனக்கூறிய அவர், ஒவ்வொரு படிப்பிலும் ஆராய்ச்சி மனப்பான்மை மிக முக்கியம் என்பதை தேசிய கல்விக் கொள்கை உணர்த்துவதாக சுட்டிக்காட்டினார்.
தற்போது 90 சதவீத மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு வேலை தேடுபவர்களாகவே உள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், புதிய தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்காமல், மற்றவர்களுக்கு வேலை வழங்கும் தொழில்முனைவோர்களாக உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
















