முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதால் விவசாயப் பொருட்களின் தரம் பாதிக்கப்படுவதாக தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் புளியன்மலை பகுதியில் பிளான்டர்ஸ் கிளப்பின் வெள்ளி விழா மற்றும் ஏலக்காய் மாநாடு நடைபெற்றது. இந்த விழாவை கேரள அமைச்சர் ஏ.பி. அனில் குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் கேரள அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரில் கேரளப் பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலப்பதாகவும், இதனால், தமிழகத்தில் விளையும் விவசாயப் பொருட்களின் தரம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை கேரள அமைச்சர் ஏ.பி.அனில்குமாரிடம் வழங்கினார்.
















