சுதந்திரம் என்பது வரலாற்றின் ஒரு அத்தியாயம் மட்டுமல்ல; அது துணிச்சல், தியாகம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உன்னத வெற்றியாகும். 80 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இத்தனை ஆண்டுகளில் நாடு எத்தனை உயரங்களைத் தொட்டுள்ளது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதன்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியபோது, ஒடுக்குமுறையிலிருந்து இறையாண்மைக்கு உயரும் ஒரு தேசத்திற்கான ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.
1947-ல் சுதந்திரம் பெற்ற இந்தியா, 2026-ல் உலகளவில் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாகவும், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளியில் சாதனை படைத்த நாடாகவும் பரிணமித்துள்ளது.
பசி மற்றும் ஏழ்மையிலிருந்து மீண்டு, உணவு உற்பத்தியில் தொடங்கி பாதுகாப்புத் துறை வரை அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்து, உலக நாடுகளுக்கு வழிகாட்டும் பலமான ஜனநாயக நாடாக நிமிர்ந்து நிற்கிறது.
200 ஆண்டுகால அடிமை விலங்கை வெள்ளையனே வெளியேறு மக்கள் இயக்கத்தின் மூலம் உடைத்தெறிந்து சுதந்திரம் பெற்ற போது கடுமையான வறுமை, உணவுப் பற்றாக்குறை மற்றும் பலவீனமான தொழில் துறை என இந்தியா திக்குத் தெரியாத காட்டில் தான் நள்ளிரவில் கண் விழித்தது.
சுமார் 12 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைந்த கல்வியறிவு விகிதத்துடன் குறைந்த சராசரி ஆயுட்காலத்துடன் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.
அடிப்படை உள்கட்டமைப்புகள் கூட இல்லாத நிலையில் பல கோடி பேர் வறுமையில் வாடிய காலகட்டம் அது. பெரும்பாலும் உணவுக்காக வெளிநாடுகளைக் குறிப்பாக அமெரிக்காவையே இந்தியா நம்பியிருந்தது.
தனது தேசிய இருப்புநிலைக் குறிப்பில் எந்தவொரு வெளிநாட்டுக் கடனோ, வரவோ இல்லாத ஒரு புதிய நாடாக உருவான இந்தியாவில் 1947-ல் 1 ரூபாய் 1 அமெரிக்க டாலருக்குச் சமமாக இருந்தது.
1947-ஆம் ஆண்டு முதல் பல புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் காரணமாக இந்திய ரூபாய் பல வீழ்ச்சிகளைச் சந்தித்திருந்தாலும் இப்போது உலக அளவில் மிக வலிமையான நாணயமாக இந்திய ரூபாய் விளங்குகிறது.
1950-ல் ஒரு பெரும் வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொண்ட இந்தியா 1951-ல் ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியது. அப்போது வெளிநாட்டுக் கடன் வாங்குவது அவசியமானதால், அரசே இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டியிருந்தது.
1962-ல் நடந்த இந்திய-சீனப் போரும், 1965-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இது இந்தியாவின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தின. 1965 மற்றும் 1966-ல் ஏற்பட்ட கடும் வறட்சி, ரூபாயின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.
1966-ல்,உருவான பெரும் நிதி நெருக்கடி காரணமாக வர்த்தகப் பற்றாக்குறைக்குக் கூடுதலாக, நிதிநிலை பற்றாக்குறையையும் இந்தியா சந்தித்தது. குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பத்திரங்களை அரசு வெளியிட்டது பெரும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது
1971-ல் இந்திய ரூபாய் அதிகாரப்பூர்வமாக டாலருடன் இணைக்கப்பட்டதும் 1975-ல் ஒரு டாலருக்கு 8.39 ரூபாய் என்ற அளவில் இந்திய நாணயத்தின் மதிப்பு இருந்தது. பத்து ஆண்டுகள் கழித்து, 1985-ல் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைக்கப்பட்டு, ஒரு டாலருக்கு 12 ரூபாய் என்றானது.
1991-ல் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியாக உச்சம் பெற்றது. அப்போதும் நிலையான நாணய மாற்று விகித முறையிலேயே இந்தியா இருந்து வந்தது.
1991-க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைகள் நாட்டில் வர்த்தகத்தை உயர்த்தின.சேவைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இந்தியா மாறியது.
முன்னதாக இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, மூன்று வார இறக்குமதிகளைக்கூடச் சமாளிக்க முடியாத நிலையில் இருந்ததால், உயர் பணவீக்க விகிதம், வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை ஆகிய அனைத்தும், ரூபாயின் மதிப்பைக் குறைக்குமாறு அரசைக் கட்டாயப்படுத்தின.
1992-ல் இந்திய ரிசர்வ் வங்கியிடம் டாலர் கையிருப்பு குறைவாக இருந்ததால், நாணய மதிப்பை நிலையாகப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டதன் விளைவாக, 1993-ல் floating நாணய மாற்று விகிதம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2008-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிலிருந்து வெளியேறியதால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டது. 2013-ல் அதிகரித்த இறக்குமதிகளின் விளைவாக அரசுக்கு டாலருக்கான தேவை பெருமளவில் உயர்ந்தது.
சொல்லப்போனால் 1947 முதல் 2014 வரை நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் பெரும்பாலும் நடந்துள்ளது. விடுதலையடைந்த முதல் 40 ஆண்டுகளை ஆரம்பகாலம் என்று கொண்டாலும் 1980, 90களில் தனிநபர் வருமானத்தில் உலகளவில் இந்தியா 148 வது இடத்தில் தான் இருந்தது. அப்போது, உலகில் இருந்த மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 155 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு நாட்டின் பிரதமராக முதல் முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடியின் கடந்த 13 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தான் நாட்டின் ஜிடிபி நிலையான வளர்ச்சியில் உலகளவில் 4 வது இடத்தில் உள்ளது.
பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கத் தாக்கங்களைச் சமாளித்து G20 நாடுகளின் மத்தியில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
2014-ல் மோடி முதன்முதலில் பதவியேற்றபோது, இந்தியாவின் பொருளாதார மதிப்பு ஏறத்தாழ 2 டிரில்லியன் டாலராக இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இப்போது இரு மடங்காகி, 4.15 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
இந்தியாவின் சராசரி தனிநபர் நிகர தேசிய வருமானம் (Per Capita Net National Income) 2025–26 நிதியாண்டின் படி சுமார் 2,08,090 ரூபாய் ஆகும். தனிநபர் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (Nominal GDP per capita) 2026ம் ஆண்டில் சுமார் 2.35 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளது. நாட்டில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜூலையில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 692.87 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மிகவும் வெளிப்படையாகத் தென்படும் பொருளாதார மாற்றம் என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சியாகும்.
கடந்த மே மாதத்தில் 29.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 23.2 பில்லியன் பரிவர்த்தனைகளை UPI மூலம் மேற்கொண்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.
சாலையோர வியாபாரிகள் முதல் பெரிய சில்லறை விற்பனையாளர்கள் வரை, நாடு முழுவதும் அன்றாட வர்த்தகத்தின் ஓர் அங்கமாகிவிட்ட UPI சர்வதேச அளவில் விரிவடைந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட சந்தைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
பரிவர்த்தனை அளவின்படி, UPI உலகின் மிகப்பெரிய நிகழ்நேர சில்லறைப் பணப்பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்பது நாட்டின் மிகப்பெரிய பொருளாதார வெற்றியாகும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் இந்தியாவின் பணவீக்க இலக்கு நிர்ணயக் கட்டமைப்பும் கொண்டுவரப் பட்டது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பண்டங்களின் சந்தையில் ஏற்படும் அதிர்ச்சிகள் மற்றும் உலகளாவிய இடையூறுகள் ஆகியவற்றால் பணவீக்கம் அவ்வப்போது அழுத்தத்திற்கு உள்ளாகி வந்தாலும், இந்தியாவின் பணவியல் கொள்கைக் கட்டமைப்பின் ஒரு முக்கியத் தூணாக அமைந்துள்ளது.
2014-ல், பங்கு முதலீடு என்பது பெரும்பாலும் மக்கள்தொகையின் ஒரு சிறிய பிரிவினரிடமே குவிந்திருந்தது நிலையில் நிதிச் சந்தைகளில் இப்போது சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு வியத்தகு அளவில் விரிவடைந்துள்ளது.
குறிப்பாக டிமேட் கணக்குகள் 20 கோடியைத் தாண்டியுள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான மாதாந்திர எஸ்ஐபி வரவுகளும் சாதனை அளவை எட்டியுள்ளன.
2014-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பெரும் வெற்றியாக நாட்டின் உற்பத்தியை அதிகரித்துள்ளது.
ஒரு முக்கிய ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ள இந்தியாவில் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து உலகத்துக்கு வழங்கி வருகின்றன.
2014 நிதியாண்டில் 686 கோடி ரூபாயாக இருந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2026 நிதியாண்டில் 38,424 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இந்தியா உலகளாவிய அரங்கில் ஒரு முன்னணி சக்தியாகவும் வளர்ந்துள்ளது.
















