தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், கணக்கில் வராத 28 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், GPay பரிவர்த்தனை மூலமாகப் பெறப்பட்ட 89 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டன.
குறிப்பாக, சென்னை கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் GPay மூலம் 31 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை வழியிலும் லஞ்சம் பெறப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 65 ஆயித்து 700 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது உதவி இயக்குநரை சந்திக்க வந்திருந்த 3 மெடிக்கல் கடை உரிமையாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது G- Pay மூலம் லஞ்சம் பெறப்படுவது கண்டறிப்பட்டது. இதையடுத்து, பண பரிவர்த்தணை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
, திருச்செந்தூர் மீன் குஞ்சுகள் வளர்ப்பு பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ஒன்றரை லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 44 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
















