ஈரான் தரைவழித் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் குவைத் மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். வளைகுடா நாடுகள் தங்களின் சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் மிகச் சிறிய நாடான குவைத் பாதுகாப்புச் சிக்கலில் சிக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்தே வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குவைத்தில் உள்ள ஷுவைபா துறைமுகத்தில் நடந்த ஈரானின் ஒரே தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 18 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். ஈரானின் தாக்குதலில் நான்கு குவைத் வீரர்கள் மற்றும் ஐந்து வெளிநாட்டினார்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
இது மட்டுமின்றி மற்றொரு தாக்குதலில் குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ‘பாட்ரியாட்’ (Patriot) பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
மேலும், அகமது அல்-ஜாபர் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்காவின் அதிநவீன எஃப்.பி.எஸ் ரேடார் அமைப்பும் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த மே மாதத்தில், வாடகைக்கு எடுத்த மீன்பிடிப் படகு மூலம் குவைத் தீவில் தரையிறங்கிய ஆறு ஈரானின் IRCG வீரர்களை குவைத் அரசு கைது செய்ததாக தகவல்கள் தெரிவித்தன.
கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்க படையெடுக்கும் என்றால் தெற்கு ஈராக் வழியாக குவைத் மீது தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கப்படும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்துகிட்டத்தட்ட 2,00,000 வீரர்களைக் கொண்ட ஈரானின் புரட்சிகர காவல்படை குவைத்தில் தரைவழித் தாக்குதல்கள் நடத்துவது, பாரசீக வளைகுடாவில் இணையக் கேபிள்களைச் சேதப்படுத்துவது மற்றும் குவைத், பஹ்ரைன் போன்ற ஷியா இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவது என ஈரான் புதிய போர் வியூகங்களை வகுத்துள்ளது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பெரிய பொருளாதார இழப்புகளைச் சந்தித்த குவைத்தின் உள்கட்டமைப்புகள் எரிசக்தி நிலையங்களும் ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் சேதமடைந்ததுள்ளன.
ஒரு காலத்தில் அமெரிக்க ஆதரவு உணர்வுடன் இருந்த குவைத் மக்களில் பெரும்பாலானோர் இப்போது அமெரிக்கப் படைகளின் இருப்பையும், ஈரான் போரைத் தொடர வேண்டும் என்ற ட்ரம்பின் முடிவையும் வெளிப்படையாகவே கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
1990-ல் ஈராக் போரின் போது சதாம் ஹுசைனிடமிருந்து தங்களை விடுவிப்பதில் அமெரிக்காவின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கும் குவைத், அமெரிக்கப் படைகளுக்குத் தங்குமிடமாக தங்கள் நாடு இருப்பதால் தான் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாவதையும் உணரத் தொடங்கியுள்ளனர்.
ஆனாலும் சவூதி உள்ளிட்ட மற்ற வளைகுடா நாடுகளைப் போல குவைத்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு குடையை எளிதில் கைவிட்டு விட்டு வேறு குடையைத் தேட முடியாது என்று என்று புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றன.
இந்நிலையில் குவைத் குறிவைக்கப்படுகிறது என்பதற்காக மட்டும் தாக்குதலை நிறுத்தவோ பின்வாங்கவோ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கவில்லை என்று கூறியுள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், குவைத்துடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாகத் தொடர்வதாக உறுதி படுத்தியுள்ளனர்.
















