திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி எப்போது வேண்டுமானாலும் உடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
திபெத் – நேபாள எல்லையில் தற்போது ஏற்பட்ட பனிப்பாறை உருகிய இடத்தின் அருகே, சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் ஏரி நிரம்பியுள்ளதாக சீன நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 லட்சம் கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரி முழுமையாக நிரம்பி வழிந்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் 30 லட்சம் கன மீட்டர் நீர் தேங்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், அந்த ஏரி எப்போது வேண்டுமானாலும் உடைந்து மற்றொரு பெருவெள்ளம் நேபாளத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இதனை, நேபாளத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளதோடு, ஏரியின் செயற்கைக்கோள் படத்தையும் வெளியிட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதோடு, அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
















