பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே அண்மையில் கையொப்பமான முத்தரப்பு மெக்கா ஒப்பந்தம் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதென்ன மெக்கா ஒப்பந்தம்? எப்படி தோல்வியில் முடிந்தது? விரிவாக பார்க்கலாம்…
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையே மேற்காசிய போர் பற்றி எரிந்தபோது சவூதி அரேபியாவின் மெக்காவில் வைத்து, பாகிஸ்தான், துருக்கி நாடுகளுடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் முழுமையாக பொதுவெளியில் வெளியாகாவிட்டாலும், ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலானது, மற்ற நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என 3 நாடுகளும் கூட்டாக அறிவித்தன.
பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்றுமே இஸ்லாமிய நாடாக விளங்கும் நிலையில், இதில் இணையுமாறு வங்கதேசத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று மெக்கா ஒப்பந்தத்தில் இணைய வங்கதேசமும் சாதகமான முறையில் பரிசீலித்து வந்தது.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி மெக்கா ஒப்பந்தம் கையொப்பமான நிலையில், வெறும் இரண்டே நாளில் அது தோல்வியைத் தழுவியது தெரியவந்துள்ளது. மெக்கா ஒப்பந்தம் கையொப்பமான 2-ஆவது நாளில் சவூதி அரேபியாவின் ஜாசான் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் குறிவைத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது சவூதிக்கு உதவ மெக்கா ஒப்பந்த உறுப்பு நாடான பாகிஸ்தானும் வரவில்லை. துருக்கியும் கையை விரித்துவிட்டது.
இந்தியாவுக்கு எதிராக நயவஞ்சமாக பாகிஸ்தான் முன்னெடுத்த மெக்கா ஒப்பந்தம் தோல்வியடைந்த சூழலில், இந்த ஒப்பந்தத்தால் யாருக்கு என்ன பயன்? என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் அப்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆமை புகுந்த வீடு விளங்கியதில்லை என்பதை போல, பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. கடந்த 1955-இல் ரஷ்யாவுக்கு எதிராக பாகிஸ்தான், துருக்கி, ஈராக், பிரிட்டன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து பாக்தாத் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகள் கழித்து, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவி வகித்தபோது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 17 நாள்கள் போர் மூண்டது. இதில், பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா சிதறடித்தபோது அந்நாட்டின் நட்பு நாடுகள் யாருமே உதவ முன்வரவில்லை.
இதேபோல, 1971-இல் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் போர் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்ததுடன், அன்றைய கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசம் தனி நாடாக விடுதலை பெற்றது.
அப்போது பாகிஸ்தானை ஓடவிட்டு வங்கதேசம் தனிநாடாக உறுதுணையாக இருந்தது இந்தியா. இவ்வாறு பாகிஸ்தானை இந்தியா புறமுதுகிட்டு ஓட வைத்த போதெல்லாம் அதன் நட்பு நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்ததே தவிர, யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை.
இதேபோல தான் சவூதி அரேபியா பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்ட போதும் பாகிஸ்தான் வாய்மூடி வேடிக்கை பார்க்கிறதே ஒழிய, ஒருவார்த்தை கூட எதிர்த்து பேசியதில்லை. நடப்பாண்டில் வேண்டுமானால், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 ஆயிரம் பேர் சவூதிக்கு சென்று அதற்கு பக்கபலமாக இருப்பதை போன்ற பிம்பத்தைக் கட்டமைக்கலாம். அதுவும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்து அமைதி திரும்பிய பின்னர்தான், பாகிஸ்தான் ராணுவம் அங்கு சென்றது.
ஏற்கெனவே பொருளாதார ரீதியாக சின்னாபின்னமான பாகிஸ்தான், சவூதியிடம் 3 பில்லியன் டாலர் கடன்பட்ட நிலையில், வேறு வழியின்றி ராணுவத்தை அனுப்பிவைத்திருக்கிறது.
சவூதி அரேபியாவுக்கு ஈரானை கண்டால் பயம். துருக்கிக்கு இஸ்ரேலை கண்டால் பயம். பாகிஸ்தானுக்கு இந்தியா என்ற பெயரை கேட்டாலே பயம்.. இந்த மூன்று நாடுகளுமே இணைந்து முன்னெடுத்த கூட்டமைப்பு, புயல் காற்றில் அகப்பட்ட சோளப்பொறி போல எடுத்த எடுப்பிலேயே தோல்வியில் முடிவடைந்துவிட்டது…
















