பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஹரிஹரன், 8-ம் வகுப்பு விடுமுறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது ஆர்வம் கொண்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கோடிங் கற்றுக்கொண்டபோது, சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் பெறும் வகையில் AI செயலியை உருவாக்கும் யோசனை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து ‘HIT Learn’ செயலியை மாணவர் உருவாக்கியுள்ளார்.
இதில் வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் வீடியோக்களைப் பார்க்கவும், பாடம் தொடர்பான சந்தேகங்களை குரல் மூலம் கேட்டு AI உதவியுடன் விளக்கம் பெறவும் முடியும் என மாணவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வினாடி வினா, புதிர்கள், Voice-to-Voice கேள்வி-பதில், பல்மொழி ஆதரவு மற்றும் ஊடாடும் மதிப்பீடுகள் உள்ளிட்ட வசதிகளும் செயலியில் இடம்பெற்றுள்ளதாக மாணவரின் தந்தை ராமநாதன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பெற்றோர் பதிவு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்றும், குழந்தைகள் செயலியில் செலவிடும் நேரம் உள்ளிட்ட பயன்பாட்டு அம்சங்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
சிறு வயது முதலே தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட தனது மகன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டி புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதாகவும், தனது சொந்த கற்றல் பிரச்னைக்கே தற்போது AI மூலம் தீர்வு கண்டிருப்பது பெருமையாக இருப்பதாகவும் மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
















