சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.75 சவரன் தங்கக் கிரீடம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, கேரள உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது.
சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களின் எண்ணிக்கை மற்றும் இருப்பு குறித்து, உயர்நீதிமன்றத்தின் தலைமையில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கிரீடம் மாயமானது கணக்கெடுப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய, சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 55.75 சவரன் தங்கக் கிரீடம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கக் கிரீடத்திற்குப் பதிலாக, போலி உலோகத்தால் செய்யப்பட்ட கிரீடம் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆரன்முளாவில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க மாலையும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐயப்பனின் திருவாபரணங்களில் மேலும் எத்தனை பொருட்கள் காணாமல் போயுள்ளன என்பது, முழுமையான கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















