நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று வீராங்கனை சீமா குமாரி அசத்தியுள்ளார்.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் தடகள பந்தயம் நடைபெற்றது. இதில் பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி முதலிடம் பிடித்து தங்கமும், ஜப்பானின் நோசோமி தனகா இரண்டாவது இடம் பிடித்து வெள்ளியும் வென்றனர்.
இந்தியாவின் சீமா குமாரி 32 நிமிடம் 50.05 விநாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இது 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய விளையாட்டின் மகளிர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும். இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சீமா குமாரிக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
















