ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை நியமிக்க 4 ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த ஆதரவை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இதுவரை எட்டு முறை ஐநா பாதுகாப்பு சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்துள்ள இந்தியா, நீண்ட காலமாகவே ஐநா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் தேவை என்று கூறிவருகிறது.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் 1945-ல் ஐ.நா சபை நிறுவப்பட்டதிலிருந்து உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒருகாலத்தில் அடிமைப்பட்டு கிடந்த பல நாடுகள் இப்போது அதிகரிக்கும் மக்கள் தொகை, வளரும் பொருளாதாரம் மற்றும் தூதரக செல்வாக்கு கொண்ட நாடுகளாக வளர்ந்துள்ளன.
மக்கள் தொகை, பொருளாதார வலிமை, பயங்கரவாத எதிர்ப்பு, மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச அமைதி காக்கும் பணிகள் மற்றும் வளர்ந்து வரும் தூதரகப் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் ஐநா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் தரவேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்து வருகிறது.
81-வது ஐ.நா. பொதுச் சபைக்கான தனது முன்னுரிமை அறிக்கையில் நாடுகளுக்கு இடையேயான இராணுவ மோதல்களுக்கு எதிராக ஐ.நா.வால் திறம்பட செயல்பட முடியாத நிலை உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள இந்தியா, ஐநாவின் செயல்திறன், நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐநா பொதுச் சபையின் 81-வது கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக , விசெக்ராட் குழுவின் V4 நாடுகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையேயான முதல் கூட்டம் நடைபெற்றது.
V4 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து உரையாற்றிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவுகள் வலுப்பெற்றுவரும் நிலையில், V4 நாடுகளுடன் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நான்கு மத்திய ஐரோப்பிய நாடுகள், ஐ நா சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் வல்லரசாகவும், குளோபல் சவுத் அமைப்பின் முதன்மை சக்தியாகவும் திகழும் இந்தியா, ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பதில் V4 நாடுகள் அனைத்தும் ஒருமித்த ஆதரவைத் தெரிவிக்கின்றன என்று ஸ்லோவாக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுராஜ் பிளனார் தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்கம் எனக் கூறியுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் மட்டுமின்றி, இந்தியா-V4 நாடுகளுக்கு இடையே ஆண்டுதோறும் வர்த்தக மாநாடு நடத்துவது, தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் இணைப்புத் துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
V4 அமைப்பின் இந்த ஒப்புதல் மட்டுமே பாதுகாப்பு சபையின் சீர்திருத்தத்தை உறுதி செய்யாது என்றாலும் , நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் கோரிக்கையை பகிரங்கமாக ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் V4 அமைப்பும் சேர்ந்துள்ளது.
பாதுகாப்பு சபையின் சீர்திருத்தம் என்பது வெறும் நிரந்தர இடத்தைப் பெறுவதை என்பதை விட மேலானதாக கருதும் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் விருப்பத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்வதாகவும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ள போதிலும், வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத ஒரே நிரந்தர உறுப்பினர் சீனா மட்டுமே.
















