செம்மண் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகையை, ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக்கூறி, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி உள்ளிட்ட ஐந்து பேர் தரப்பில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மூல வழக்கில் விடுதலை செய்யப்பட்டதால், அமலாக்கத் துறை வழக்கையும் ரத்து செய்யக்கோரி பொன்முடி உள்ளிட்டோர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக, தமிழக அரசுத்தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக
அமலாக்கத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
















