ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 37க்கு 34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்றதும் இந்திய வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் கபடி இறுதிப் போட்டியிலும் ஈரான் அணியை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடினர். முதல் பாதியில் பின்தங்கிய இந்தியா, இரண்டாவது பாதியில் அபாரமாக விளையாடி 40-க்கு 34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளன
















