நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து மீண்டும் கோதுமையை இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. என்ன நடந்தது ? கோதுமைக்கு ஏன் வங்கதேசம் மீண்டும் இந்தியாவை நாடுகிறது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்கதேசத்தின் முக்கிய உணவாக அரிசி இருந்தாலும்,அந்நாட்டின் இரண்டாவது மிக முக்கியமான உணவு தானியமாக கோதுமை உள்ளது.
வங்கதேசம் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது; ஆனால் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய மேலும் 70 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
வரலாற்று ரீதியாக இந்தியா, வங்கதேசத்தின் முக்கிய கோதுமை விநியோகஸ்தராக இருந்து வருகிறது; நீண்ட காலமாகவே மொத்த கோதுமை இறக்குமதியில் 50 சதவீதத்துக்கும் மேல் இந்தியாவில் இருந்தே வங்கதேசம் இறக்குமதி செய்து வருகிறது.
2020-2021-ல் 299.4 மில்லியன் டாலர் மதிப்பிலான 11,57,399.35 டன் கோதுமையை வங்கதேசத்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்தது.
குறிப்பாக அதே ஆண்டு உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கிய நிலையில் 2021-22 பயிர் ஆண்டில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக, இந்தியாவின் சொந்த கோதுமை உற்பத்தி முந்தைய ஆண்டின் 109.59 மில்லியன் டன்களிலிருந்து 2.5 சதவீதம் குறைந்து 106.84 மில்லியன் டன்களாக சரிந்தது.
எதிர்பார்த்ததை விடக் குறைவான உற்பத்தி மற்றும் உலகளாவிய தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் உள்நாட்டு விலை 20 சதவீதம் வரை அதிகரித்தது. இதனையடுத்து 2022-ஆம் ஆண்டு முதல் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் பத்திரங்களின் (letters of credit) அடிப்படையிலான ஏற்றுமதிகள் மற்றும் பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட விநியோகங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இதன் விளைவாக வங்கதேசத்துக்கான இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. அர்ஜென்டினா, கனடா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வங்கதேசம் தள்ளப்பட்டது. இதில் 40 சதவீத இறக்குமதிகள் கருங்கடல் வழியாகவே வந்தன.
கருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இப்போது மீண்டும் இந்தியக் கோதுமையை வங்கதேசம் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
2025-26 பயிர் ஆண்டில் 120.65 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவிலான கோதுமையை இந்தியா உற்பத்தி செய்தது. இதனால் உள்நாட்டில் உபரி கோதுமை இருப்பும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக அமலில் இருந்த கோதுமை ஏற்றுமதி தடையை கடந்த ஆகஸ்ட்டில் மத்திய அரசு இந்தியா நீக்கியது.
இதற்கிடையே கருங்கடல் பகுதிகளில் உள்ள கப்பல் போக்குவரத்து மற்றும் தானிய முனையங்கள் மீதான தாக்குதல்களால் ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து வரும் கோதுமை விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.48 மில்லியன் டன்களாக இருந்த உக்ரைனின் கோதுமை ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட்டில் 1.13 மில்லியன் டன்களாகச் சரிந்துள்ளது.
வழக்கத்தை விட அரிசி விலை அதிகமாக இருப்பதாலும், உள்நாட்டில் கோதுமைக்கான தேவை அதிகரிப்பதாலும் 2026-ல் வங்கதேசத்தின் கோதுமை இறக்குமதி முந்தைய ஆண்டை விட 7.5% அதிகரித்து 6.7 மில்லியன் டன்களாக உயரக்கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து மாற்று கோதுமை விநியோகங்களைப் பெற முடிந்தாலும், விலை அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு டன்னுக்கு 380 டாலருக்கும் குறைவாக இருந்த ஆஸ்திரேலிய கோதுமையின் விலை, தற்போது ஒரு டன்னுக்கு 480 டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் டாக்காவில் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளதாக , வங்கதேச அரசின் வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் போக்குவரத்து நேரம் குறைவதோடு சரக்குக் கட்டணமும் குறைவாக உள்ளதால் இந்தியக் கோதுமையை ஒரு டன்னுக்கு 305 முதல் 326 டாலர் வரையிலான விலையில் வங்கதேச இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துவருவதாக கூறப் படுகிறது.
ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி அளித்ததிலிருந்து, 2,00,000 டன் கோதுமையை வங்கதேச இறக்குமதியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
மேலும் இலங்கையைச் சேர்ந்த இறக்குமதியாளர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 60,000 டன் கோதுமையை, ஒரு டன்னுக்கு சுமார் 325 டாலர் என்ற விலையில் வாங்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27ம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து 2 மில்லியன் டன்னை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
















