தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக – தவெகவினரிடையே ஏற்பட்ட மோதலில், தவெக தொண்டர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையத்தில் கடந்த 25-ம் தேதி இரவு, தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் சம்பத் குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக – தவெகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தவெக பணிமனையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் சம்பத் குமார், வேறு பகுதியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் நிதானமின்றி பிரசாரத்தை திசைதிருப்பும் வகையில் செயல்பட்டதாக கூறினார்.
மோதலில் தவெக தொண்டர்கள் சிலர் காயமடைந்ததாகவும், அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்றபோது, மக்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அமைச்சர் சம்பத் குமார் கூறினார்.
















