சேலத்தில் குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேயர் மற்றும் கவுன்சிலர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது.
சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைக் கழிவுகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் அலகுகள் மற்றும் அறிவியல் பூர்வமான குப்பை நிரப்பும் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்கு வராத நிலையில், திமுக மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கவுன்சிலர்கள் அங்கு சென்றனர். அவர்களையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குப்பை எரிசக்தி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
















