துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற Flydubai விமானத்தில் இந்திய விமானியை கத்தியால் குதித்து சதிச் செயலில் ஈடுபட்ட துணை விமானி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தில் இருந்த துணை விமானி காக்பிட்டில் வைத்து இந்தியரான முதன்மை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, நிலைகுலைந்து சரிந்த ஸ்மித் மச்சார், அந்த ஆபத்தான சூழலிலும் காக்பிட் கதவைத் திறந்து, துணை விமானியைப் பிடித்துக் கொடுத்தார்.
அதே விமானத்தில் கூடுதலாக இரண்டு விமானிகள் பயணிகளாகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் அவர்கள் உதவியால் அந்த விமானம் வடமேற்கு சவூதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதும், துணை விமானியைக் கைது செய்த அதிகாரிகள் அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கூடுதலாக இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியாக இருக்குமோ என்ற கோணத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் புலனாய்வு அதிகாரிகள், துபாய்-டெல் அவிவ் வழித்தடத்திற்கான விமானக் குழுவினர் நியமனம் குறித்தும், இஸ்ரேலுக்குள் விமானத்தை இயக்குவதற்கான அனைத்துத் தகுதிகளையும் அந்தத் துணை விமானி பெற்றிருந்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
துணை விமானியின் அடையாளம் வெளியிடப்படவில்லை என்றாலும் ஓமன் நாட்டைச் சேர்ந்த அவர் Flydubai விமான நிறுவனத்தில் சுமார் ஒன்பது மாதங்களாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவரது வயது, முந்தைய விமானப் பணி அனுபவம், பயிற்சி விவரங்கள் மற்றும் இதற்கு முன் பணியாற்றிய நிறுவனங்கள் போன்ற எந்த தகவல்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
அந்த ஓமன் நாட்டு துணை விமானி வழக்கத்திற்கு மாறாக அதிக மதப்பற்று கொண்டவராகவும் கடுமையான மத நடைமுறைகளைக் கடைப்பிடித்ததாகவும், அடிக்கடி பிரார்த்தனை செய்பவராகவும், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவராகவும் இருந்ததாக அந்த சக ஊழியர் கூறியதாக கூறப்படுகிறது. இதே தகவலை மேற்கோள் காட்டி, அந்த துணை விமானி ஒரு “மதத் தீவிரவாதி” என்று கூறப்படுகிறது.
சர்வதேச ஊழியர்களைக் கொண்ட, துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனமான Flydubai-யில் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி என்பதைத் தாண்டியும் விசாரணை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ஃப்ளைதுபாய்’ நிறுவனத்திற்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த துணை விமானியான ஓமன் நாட்டு குடிமகனுக்கு Flydubai நிறுவனத்தில் பணியாற்றவும் இஸ்ரேல் செல்லும் விமானத்தில் எப்படி பணியமர்த்தப்பட்டார் என்பதும் தான் கேள்வி. ஓமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லாததால், இந்தக் கேள்வி மிக முக்கியமானதாக உள்ளது.
அவரிடம் இரட்டை குடியுரிமை இருந்ததற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், வேறொரு நாட்டிற்கான passport-யையும் வைத்திருக்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் வரும் விமானிகளை இன்னும் தீவிரமாகச் சோதிக்கப்போவதாகவும் அறிவித்துள்ள இஸ்ரேல், இனி விமானிகளுக்கான பாதுகாப்புச் சோதனைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய முதன்மை விமானியைக் கத்தியால் குத்திய ஓமன் நாட்டுத் துணை விமானி ஏன் விமானக் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றார் ? அதற்குப் பின் பயங்கரவாத சதித் திட்டம் இருந்ததா ? என்பது பற்றி எந்த உறுதியான தகவல்களும் இல்லாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
















