இந்திய அதிகாரிகளை எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்கப் படையினர் அனுமதிப்பதில்லை என அமெரிக்கத் தளபதியிடம் இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், அமெரிக்க பசிபிக் விமானப்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய ஏ.பி.சிங், எஃப்-35 போர் விமானத்தை விற்பனை செய்வது குறித்து பேசும் அமெரிக்கா, இந்திய அதிகாரிகளை அந்த விமானத்தின் அருகில்கூட அனுமதிப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.
விமானத்தின் விமானி அறையைக்கூட அமெரிக்கா தங்களுக்குக் காட்டவில்லை என்றும், இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரப்பூர்வ முன்மொழிவு எதையும் அமெரிக்கா வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, ரஷ்யா தனது 5-ம் தலைமுறை எஸ்யூ-57 போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாகவும், அதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஏ.பி.சிங் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமெரிக்கத் தளபதி கெவின் ஷ்னைடர், எஃப்-35 விமானம் தொடர்பான தகவல்களைப் பகிர்வது குறித்த முடிவுகள் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டவை அல்ல என்றும், பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையிலேயே அவை தீர்மானிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
















