முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய, ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் மனுத்தாக்கல் செய்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரர் அன்பில் மகேஷ் தரப்பில் கூறும் குற்றச்சாட்டு தவறானது என்று தெரிவிக்கப்பட்டது.
அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும்,
அரசுத் துறைச் செயலாளரின் ஒப்புதல் பெற்றே வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதாகவும், எனவே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
















