ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்டுள்ள தகவலில், ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கைது செய்யப்படாததற்கான காரணங்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்த வழக்குகளை விசாரித்த விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் வீடியோ கேமரா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோ கேமராக்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் இதுவரை 10 சிறுமிகள் தரப்பில் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வீரமணி மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தொடர்புடைய நபரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,
தலைமறைவாக உள்ள நபரை கண்டறிய லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















