தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளான திட்டக்குடி, பேருந்து நிலையம், மேலவாசல் வீதி, மருதுபாண்டி நகர், புதுரோடு உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேவேளையில், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் உப்புத்தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பின் விலை உயரக்கூடும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பள்ளி மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, விளமல், வண்டாம்பாளை, மாங்குடி, மாவூர், கோமல், புலிவலம், கேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பள்ளிக்குச் சென்ற மாணவர்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.
















