இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் (GPS) வழிகாட்டி அமைப்பான நேவிக் (NavIC) NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவின் GPS அமைப்பைச் சார்ந்திருக்காமல், உள்நாட்டு ஜி.பி.எஸ் அமைப்பை இந்தியா பயன்படுத்த தொடங்கிவிட்டது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நேவிக் (NavIC) என்பது இந்தியாவின் சுதந்திரமான வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பாகும். ‘Navigation with Indian Constellation’ என்பதன் சுருக்கமே ‘NavIC’ ஆகும். இது இந்திய நிலப்பரப்பு மற்றும் நாட்டின் எல்லைகளிலிருந்து சுமார் 1,500 கி.மீ தொலைவு வரையிலான பகுதிகளில், துல்லியமான இருப்பிடம் மற்றும் நேரத் தகவல்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் சிக்னல்களை ஸ்மார்ட்போன்கள், வாகனங்கள், கப்பல்கள், ரயில்கள் மற்றும் பிற சாதனங்கள் வழிகாட்டுதலுக்கும், இருப்பிடத்தைக் கண்டறியவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. முந்தைய செயற்கைக்கோளான NVS-02 யை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனதால் நேவிக் தொகுப்பின் செயல்பாடு பலவீனமடைந்திருந்தது.
முந்தைய தலைமுறை செயற்கைக்கோள்களில் ஏற்பட்ட, அணுக்கடிகாரப் பழுது மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, துல்லியமான வழிகாட்டுதல் சேவையைப் பெறுவதில் நீண்டகாலமாகத் தாமதம் நீடித்து வந்தது.
NVS-03 என்பது அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். சுமார் 2,232 கிலோ எடைகொண்ட அதிநவீன செயற்கைக் கோள் நேவிக் தொகுப்பின் மூலம் வழங்கப்படும் வழிகாட்டு சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்கைக் கோள் கடந்த அக்டோபர் 30ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, GSLV-F18 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.
வெற்றிகரமான ஏவுதலுக்குப் பிறகு, NVS-03 முதலில் ஒரு இடைக்காலச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படிப்படியாக அதன் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான தொடர் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ள இஸ்ரோ, இந்தச் செயற்கைக்கோள் 35,842.6 கி.மீ முதல் 34,594.9 கி.மீ வரையிலான திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
இந்த வெற்றி, இந்தியாவின் சுதந்திரமான வழிகாட்டுதல் அமைப்பான NavIC-ன் முழுமையான செயல்பாட்டுத் திறனை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாக அமைந்துள்ளது.
ஏற்கனவே உள்ள L5 மற்றும் S அலைவரிசை சமிக்ஞைகளுடன், L1 சமிக்ஞையையும் கொண்டுள்ள NVS-03 செயற்கைக்கோள் கொண்டுள்ளதால் இதன் மூலம் சாதாரண பொதுமக்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பொது வழிகாட்டுதல் சாதனங்களில் ‘நேவிக்’ சேவையை மிக எளிதாகப் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் பணி ஆயுட்காலம் கொண்டுள்ள இந்தச் செயற்கைக் கோள், நேவிக் தொகுப்பின் செயல்பாட்டை மீண்டும் சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NVS வரிசையில் அடுத்து NVS-04 மற்றும் NVS-05 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்படும் போது இந்தியாவின் ‘உள்நாட்டு ஜி.பி.எஸ்.,’ மேலும் துல்லியமான மற்றும் அசைக்க முடியாத வலிமையைப் பெறும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
















