கோவை அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோவையில் உள்ள அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடம் இருந்து அதிக விலைக்கு தரமற்ற நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், சில நூல்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள், தவறான தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் கோவை அறிவுலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நூல் கொள்முதல் முறைகேட்டில் தொடர்புடைய பதிப்பகத்தினர், அதிகாரிகள் மற்றும் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை பெரியார் அறிவுலகத்தில் தமிழ் புத்தகங்களை தொடர்ந்து ஆங்கில புத்தகங்களிலும் போலியானவை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விண்டேஜ் பிரஸ் லிமிடெட் என்ற பதிப்பகத்தின் 250-க்கும் மேற்பட்ட நூல்களில், போலி ISBN, AI எழுத்து மற்றும் திருடப்பட்ட கருத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெரியார் அறிவுலகத்தில் உள்ள ஆங்கில புத்தகங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
















