புதிய கல்விக் கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதை ஏற்காத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராகப்
பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:
ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, சிறுமியோ என யாராக இருந்தாலும் ஒருவருக்கு கல்வி அளிப்பதன் மூலம் நாம் பெறும் மகிழ்ச்சி அளவிட முடியாதது என்றார்.
கல்வி என்பது எந்த வகையிலும் ஒருவரிடம் இருந்து பறிக்க முடியாத ஒன்று என அவர் தெரிவித்தார். அதை பகிர்ந்து கொண்டே இருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எழுத்தறிவை ஆர்வத்துடன் அதிகரித்தால், நாளந்தா, தக்ஷசீலா போன்ற கற்றல் மையமாக இந்தியா தனது பழைய நிலையை மீண்டும் அடைய முடியும் என்று தன்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த அவர், இந்த கொள்கை தேசத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்றார்.
இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது எனவும் அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.