அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய சென்றபோது, மிகவும் மர்மமான ஆயுதம் ஒன்றை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்ட வீரர்களின் மூக்கில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியதாகவும், அவர்களால் சிறிதும் அசைய முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஒருநாட்டிற்குள் சத்தமே இல்லாமல் நுழைந்து, அந்நாட்டின் அதிபரின் வீட்டிற்கே சென்று, பாதுகாவலர்களை வீழ்த்தி, அதிபரை கைது செய்வது என்பது சாத்தியமா?. அதுவும், வெறும் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்குள்…
ஜனவரி 3ம் தேதிக்கு முன்பு இந்த கேள்வியை கேட்டிருந்தால், யாராக இருந்தாலும், அதற்கு சாத்தியமே இல்லை என்றுதான் கூறியிருப்பார்கள். ஆனால், இப்போது யாரும் அப்படி கூற மாட்டார்கள்.
இத்தனை பெரிய வேலையை, இத்தனை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றால், அமெரிக்காவிற்கு பல அதிநவீன ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும். அந்த ஆயுதங்கள் குறித்த தகவல்கள்தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட அந்த சமயத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை, வெனிசுலா வீரர் ஒருவர் விவரித்துள்ளார்.
ஜனவரி 3ம் தேதி வெனிசுலா எல்லைப்பகுதியில் இருந்த அனைத்து ரேடார்களையும் அமெரிக்க படை செயலிழக்க செய்ததாகவும், பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து ட்ரோன்களை ஏவி, தங்கள் நாட்டு வீரர்களை அமெரிக்க படை நிலைகுலைய செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தலைநகர் கராகஸூக்குள் நுழைந்ததாக அவர் கூறியுள்ளார்.
“ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில்தான் இருந்தது. வெறும் 8 ஹெலிகாப்டர்கள் மட்டுமே வந்திருக்கும் என கருதுகிறேன். அந்த ஹெலிகாப்டர்களில் இருந்து அமெரிக்க வீரர்கள் கீழே இறங்கினார்கள். அவர்களும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தொழில்நுட்ப ரீதியாக அதிக வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள்” என வெனிசுலா வீரர் தெரிவித்துள்ளார்.
100 கணக்கான எண்ணிக்கையில் தாங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க படையை எதிர்க்கொள்ள முடியவில்லை என அவர் கூறியுள்ளார். அமெரிக்க வீரர்கள் துல்லியமாகவும், அதேநேரம் அதிவேகமாகவும் சுடத்தொடங்கியதாக கூறிய அவர், அவர்கள் ஒவ்வொருவரும் நிமிடத்திற்கு 300 முறை சுட்டதாகக் கூறியுள்ளார்….
“அமெரிக்க வீரர்கள் வெறுமனே ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தவில்லை. அவர்கள் திடீரென ஒரு வினோத தாக்குதலை நடத்தினார்கள். அதனை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. அது மிகவும் தீவிரமான ஒலி அலை போல் இருந்தது.
அதனை கேட்டதும் எங்கள் தலை வெடித்து விடுவதை போல் உணர்ந்தோம். சிறிது நேரத்தில் எங்கள் அனைவரது மூக்கில் இருந்தும் ரத்தம் வழிய தொடங்கியது. சிலர் ரத்த வாந்தி கூட எடுத்தனர். பின்னர் நாங்கள் தரையில் வீழ்ந்தோம். எங்களால் சிறிதும் அசைய முடியவில்லை.” என அந்த தருணத்தை விவரித்துள்ளார், வெனிசுலா படை வீரர்.
அவர்கள் வெறும் 20 பேர் மட்டுமே இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை எனவும், தங்கள் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க படையின் தொழில்நுட்பத்துடனும், அவர்களின் ஆயுதங்களுடனும் தங்களால் போட்டிபோட முடியவில்லை என கூறியுள்ள அந்த வீரர், இதற்கு முன்னர் அப்படிப்பட்ட ஒரு தாக்குதலை பார்த்ததே இல்லை என பிரமிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவை எதிர்த்து போரிட முடியும் என நினைப்பவர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். அமெரிக்காவால் என்ன செய்ய முடியும் என்பது, அந்நாட்டை எதிர்க்க நினைப்பவர்களுக்கு தெரியாது.
அமெரிக்காவின் தாக்குதலை பார்த்த பிறகு, நான் ஒருபோதும் அதன் எதிரணியில் நிற்க விரும்ப மாட்டேன். வெனிசுலாவில் நடைபெற்ற இந்த சம்பவம் வெனிசுலாவில் மட்டுமல்ல, இந்த பிராந்தியம் முழுவதுமே பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது.” என பாதுகாப்பு படை வீரர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா வீரர் தெரிவித்துள்ள இந்த தகவல்கள் அமெரிக்காவின் ஆயுத பலம் எத்தகையது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளன. குறிப்பாக, எதிரி நாட்டு வீரர்களின் மூக்கில் இருந்து ரத்தம் வர செய்து, அவர்களை அசைய முடியாமல் செய்யும் அமெரிக்காவின் அந்த ஆயுதம் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
















